அப்துல் கலாம் கண்ட கல்விக் கனவு பலிக்குமா?

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவருமான‌  திரு அப்துல் கலாம் தனது 84-ம் வயதில் காலாமானார். மேகலயா மாநிலம் சில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விகழகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாணவர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கிவிழுந்து காலம் எய்திவிட்டார். அவருடைய இழப்பை அறிந்து நாடே அதிர்ந்து போனது. நவீன இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் தமது எளிமையான தோற்றத்தாலும், ஊக்கமளிக்கும் பேச்சாலும் கவர்ந்தவர் அவர்.

பள்ளியில் படிக்கின்ற சமயங்களில் அவர் மிகச் சாதாரண மாணவராகவே இருந்திருக்கின்றார். பின்னர் எப்படி அவர் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தார் என்பதை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இவ்வளவு சிறப்புக்களை அவர் அடைவதற்கு எது துணை புரிந்தது? அவரது தமிழ்வழிக் கல்வியால் கிடைத்த ஆழமான அறிவும், மாசற்ற ஒழுக்கமும் மட்டுமே. அவருடைய தாய்மொழிக் கல்வியானது அவர் விரும்பிய அறிவையும், நல்லொழுக்கத்தையும் அவருக்குப் புகட்டியது அது தான் அவருடைய முன்னேற்றத்திற்கு அச்சாரமாகவும் விளங்கியது.

தமிழ்க் கல்வி அவரது சிறுவயதிலேயே அவருக்குத் திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தது. அந்தத் திருக்குறளை கடைசிவரை வாழ்வியல் நெறியாக ஏற்று வாழ்ந்தவர் அவர். திருக்குறள் காட்டிய வழியில் புலால் உணவையும், மதுவையும் தவிர்த்தவர் ஆவார். அவர் தமது தன்னம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் திருக்குறளே காரணம் எனப் பலமுறை சொல்லியிருக்கின்றார். திருக்குறள் பற்றி அவர் பேசாத இடங்கள் கிடையாது. தமிழர்கள் அல்லாதோர் மத்தியில் பேசும் போது கூடத் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதே அவருடைய வழக்கம். அவர் பல மேடைகளில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி, இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான அனைத்தும் அந்த இலக்கியங்களில் இருக்கின்றன எனப் பேசியிருக்கின்றார். ஐரோப்பிய பாராளமன்றத்தில் பேசுகின்ற போதும் கூட, ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வரிகளைப் பேசி சகோதரத்துவத்தின் மாண்பை எடுத்துக் கூறினார்.

ஒருமுறை சீனக் கவிஞர் யூசி அவர்கள், திரு அப்துல் கலாமை சந்தித்த போது அவர் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கவிதையான திருக்குறளை வழங்கி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வழங்கி திருக்குறளை வாசித்துப் பார்க்குமாறும், பிடித்திருந்தால் சீன மொழியில் வெளியிடுங்கள் என வேண்டியிருக்கின்றார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் திருக்குறளை வாசித்த வந்த யூசி அதன் தத்துவ ஆழத்தையும், கருத்துக்களையும் கண்டு வியந்த அவர் 2011-யில் உலகக் கவிஞர்கள் மாநாட்டின் போது திரு அப்துல் கலாம் முன்னிலையில் திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார். இந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்தே திரு அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மீதும், திருக்குறள் மீதும் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதை உணர முடியும்.

ஆனால், அப்துல் கலாமுக்கு ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவு இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை. இந்த நாடு தன்னிறைவு அடையவும், பெருவளர்ச்சி காணவும், சீரும் செழிப்புமாக உயரவும் அவர் சொல்லிய ஒரு விடயம் பலராலும் பேசப்படாமலும் மாணவ சமுதாயத்திடம் கொண்டு செல்லப்படாமலும் இருக்கின்றது. சொல்லப் போனால் அப்துல் கலாமின் இந்தக் கனவுத் திட்டத்தை நம் நாட்டின் அரசுகளும், நமது பெருமுதலாளி வர்க்கமும் வேண்டும் என்றே மறைத்து வருகின்றது என்பேன்.

அந்த கனவு என்னவெனில் ஒவ்வொரு மாணவரும் தாய்மொழி வழியில் கல்வி கற்க வேண்டும் என அவர் விரும்பினார். அவரது முழுப் பள்ளிக் கல்வியும் தமிழ் பள்ளிக்கூடத்தில் தான் அமைந்திருந்தது. ஆனால் வாழ்வின் எந்தவொரு உயர்ந்த இடத்தை அடைந்தும் தமிழ் மொழியை அவர் விட்டுக் கொடுக்கவில்லை.

முக்கியமாக இன்றைய இளம் சமூகத்தவர் தமிழ் வழிக் கல்வியைப் பெற வேண்டும் என அவர் தீவிரமாக விரும்பினார். வெறும் இலக்கியத் தமிழ் மட்டுமின்றி, அறிவியல் தமிழை வளர்க்க வேண்டும் என்பதிலும் அவர் அதிக ஆர்வமுடையவராக இருந்திருக்கின்றார். தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் திடங்களுடன் “எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்” என்ற புத்தகத்தை எழுதிவந்தார். தமிழில் அவர் எழுதிவந்த இந்தப் புத்தகத்தின் 7 அத்தியாயங்கள் மட்டும் நிறைவடைந்திருப்பதாக அவரது ஆலோசகரான பொன்ராசா வெள்ளைச்சாமி தெரிவித்திருக்கின்றார். இந்தப் புத்தகத்தை நிறைவு செய்யாமலேயே அவர் காலமானது வருத்தம் தருகின்றது.

சென்ற ஆண்டுச் சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது தமிழ் மொழி வழியாகத் தமிழர்கள் எவ்வாறு செழிக்க வேண்டும் என்பதை விரிவாகக் கூறியிருந்தார்.

” தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே, தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தமிழைப் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றைக்குத்தான் தமிழ் வளரும்.

அதாவது, தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித் துறை செயல்பாடுகள், அரசியல், திரைப்படம், ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, தமிழ் மென்மேலும் செழித்து வளரும். தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் மொழி மீது ஆர்வம் உள்ளவர்கள், தமிழ்த் துறையின் தலைவர்கள், தமிழ் படிக்கும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆறு முக்கியச் செயல் திட்டங்களைச் செய்ய வேண்டும்.

அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர் கல்வி, ஆராய்ச்சித் துறைகளில் பயன்பாட்டு மொழியாகத் தமிழைக் கொண்டு வரத் தேவையான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் உள்ள பாடப் புத்தகங்களை, ஆங்கிலம், உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து, அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். அதைக் கல்வி பயில்வதற்கான நூலாக மாற்றம் செய்து, அதை அனைத்து உயர் கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும், தாய் மொழியான தமிழையும் அடிப்படையாக வைத்து நமது மொழியை வளர்க்க வேண்டும். முதலில் தமிழ் மொழியில் உயர் கல்வியைக் கற்பிக்கச் செய்து, அதன்பிறகு, ஆராய்ச்சியையும் நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து உலக அளவில் அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.அதை புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது அவசியம்.

தமிழ் மொழி வளர்வதற்கு உயர்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பங்கள், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிகளைச் செய்து தாய்மொழியிலேயே சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த வேண்டும்.

இதன் மூலம், நாம் உலகத் தரத்தோடு புதிய சாதனங்களை, இயந்திரங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளோடு போட்டி போட்டு வெற்றி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம், தொழில் மேம்பாடு அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும்.

ஆட்சி அதிகாரத்திலும், சட்டம், நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதேசமயம், தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு அதை, துணை ஆட்சி மொழியாகப் பயன்படுத்த வேண்டும். ” எனத் திரு அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிக் கூறுகின்றார்.

கலாம் தமிழில் பேசுவதைப் பெருமையாக நினைத்தார். நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசு தலைவரான பிறகும், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும் திருக்குறளை உதாரணம் காட்டாமல் இருந்ததில்லை. ஆனால் அவருடைய தமிழ் மொழிக் கனவானது செவிடன் காதில் ஊதிய சங்காகத் தமிழ் இளைஞர்களால் கண்டு கொள்ளபடாமலேயே போனது. இன்று அவருக்காகத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் கண்ணீர் அஞ்சலில் செலுத்துகின்ற இதே இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் குறைந்து வருவதை எண்ணி பல சமயம் அவர் வருத்தப்பட்டிருக்கின்றார். தமிழக இளைஞர்கள் அனைவரும், தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என அவர் விரும்பியதாக அவரது கல்லூரி தோழர் சம்பத்குமார் கூறினார். திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த கலாமின் நெருங்கிய தோழராக இருந்தவர் சம்பத் குமார்.

இன்று செவ்வாய் கோளிற்கு உலகிலேயே மிகக் குறைந்த செலவில் இந்தியா ராக்கேட் விட்டது எனப் பெருமையாக நாம் பேசிக் கொள்கின்றோம். அந்தச் செவ்வாய் கோளிற்குச் சென்ற விண்கலனை வடிவமைத்து ஏவ தலைமைத் தாங்கியவர்களும் தமிழர்களே. சுப்பையா அருணன், மயில்சாமி அண்ணாதுரை ஆகிய இருவரும் தமிழ்வழியில் கல்வி கற்று உருவாகிய விஞ்ஞானிகளே. தமிழ்வழிக் கல்வி தான் நம் தமிழ்நாட்டில் அப்துல் கலாம் போன்ற மாமேதைகளையும், எண்ணற்ற சாதனையாளர்களையும் உருவாக்கித் தந்துள்ளது. ஆனால் அத்தகைய தமிழ்வழிக் கல்வியை அழிக்கும் திட்டதோடு இன்று அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்படுகின்றது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது.

வெறும் பகட்டுக்காகவும் போலியாகவும் தற்காலிக சுகங்களுக்காகவும் தாய்மொழிக் கல்வியைத் தூர்த்துவிட்டு அதன் மீதேறி அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைப் பற்றி மேடைகளில் பேசுவதால் என்ன பயன். இன்று அவருடைய திருவுருவை வணங்கி கண்ணீர் மல்க மாலைகள் போடுவதோடு நமது கடமை முடிந்துவிட்டது என மாணவர்கள் எண்ணாமல், இந்த நாட்டை முன்னேற்ற‌ அவர் எடுத்துக் கூறிய தாய்மொழிக் கல்வியைத் தமிழ்மொழிக் கல்வியை நிஜமாக்க வேண்டும். திருக்குறள் எடுத்துக் காட்டும் வாழ்வியலோடு, தாய்மொழிக் கல்வியின் ஊடாக அறிவியலையும், ஆற்றலையும், கற்பனைத் திறனையும் வளர்த்துக் கொள்வதால் மட்டுமே அவருடைய கனவுகள் மெய்யாகவே சாத்தியப்படும். அதற்கு முதல் படியாகத் அப்துல் கலாம் விரும்பியது போலத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் அனைத்திலும் விரைவாகத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வர உறுதியேற்போமாக.

– விண்ணன்

0 comments:

Post a Comment