சென்ற சுதந்திர தினத்த்தன்று இந்தியாவில் மொழிகளுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சமூக ஊடகமான ட்விட்டரில் சிலர் ஒன்று கூடி ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நிகழ்த்தனர். #StopHindiImposition என்ற ஆச்சடுக்கு மூலமாக அன்றைய தினத்தில் ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் வருமளவில் பலரும் ஒன்றுகூடி குரல் எழுப்பியது நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த பலரும் இந்தியாவின் ஆட்சி மொழி சட்டத்தைத் திருத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராத்தி உட்பட பல மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்குமாறு அறைக்கூவல் விடுத்திருந்தனர்.

இந்தியாவில் இந்தி மொழியை அடுத்து வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழி பேசுவோரே அதிகம் இருக்கின்றனர் என கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்த மொழிகள் பேசுவோர் மட்டுமே இந்தியாவில் 30 % மக்களாகவும் இருக்கின்றனர். அதாவது, இந்த ஒவ்வொரு மொழி பேசுவோரது தொகையும் பல ஐரோப்பிய மொழிகளைப் பேசுவோரை விட மிக அதிகமாக இருக்கின்றனர். அது மட்டுமின்றி, இந்த மொழிகள் பேசப்படும் ஒவ்வொரு மாநிலமும் பல ஐரோப்பிய நாடுகளை விட நிலப்பரப்பில் பெரியதாகவும் இருக்கின்றது.

இந்த மொழிப் போராட்டத்தை பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற Promote Linguistic Equality முகநூல் குழுவைச் சேர்ந்தவர்களே ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முகநூல் குழுவில் தற்போது ஏறத்தாழ 8,000 பேர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்திய அரசாங்கம் இந்தி மொழியை மட்டும் சீராட்டி வளர்ப்பதாகவும், மற்ற மொழிகளின் உரிமைகளை புறக்கணிப்பதாகவும் இக் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த ட்விட்டர் போராட்டத்தின் குறிக்கோளே இந்திய மத்திய அரசாங்கம் மொழி சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும், இந்தி மொழியல்லாத மாநிலங்கள் மீது இந்தி மொழித் திணிப்பை செய்யக் கூடாது என்பதே என்கின்றனர் அவர்கள்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பது ஒன்றும் இந்திய வரலாற்றில் இது முதன்முறையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த மாதிரியான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வருகின்றன. 1937-யில், சென்னை மாகாணத்தை ஆட்சி செய்து வந்த இந்திய தேசியக் காங்கிரசின் அரசாங்கம், பள்ளிகளில் கட்டாய இந்தி என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அமுலாக்கியது. இதனால் அப்போது சென்னை மாகாணத்தில் பொதுமக்களிடையே இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட 3 வருடங்கள் பல போராட்டங்களை பொது மக்கள் முன்னெடுத்தனர். இதன் விளைவாக, 1940-யில் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் துரை பள்ளிகளில் கட்டாய இந்திப் பாடத்தை நீக்கி ஆணையிட்டார். 

இந்திய விடுதலைக்குப் பின், 1949-யில் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் இந்தியாவிற்கான ஆட்சி மொழி குறித்து விவாதம் நடந்தது. அப்போது சென்னை மாகாண உறுப்பினராக இருந்த ராமலிங்கம் செட்டியார் அவர்கள், இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என எச்சரித்தார். அவர் உட்பட தென்னிந்தியாவைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் எதிர்ப்பினால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கும் திட்டத்தை அப்போதைய ஆட்சி மன்றத்தினர் கைவிட்டனர். அதனால் இன்றுவரை இந்தியாவின் தேசிய மொழி என எதுவும் இல்லை. ஆனால், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி நீடித்து வருகின்றது.

பின்னர் 1965-யில் மத்திய அரசாங்கம் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க விழைந்தனர். இதனால் சென்னை மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாத்திரி இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலமே நீடிக்கும் என வாக்குறுதி தந்தார். அப்போது ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் விளைவாக, சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முற்றுப் பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது.

மீண்டும் 1967-யில் இந்திய அரசாங்கம் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும், இந்தி பேசப்படாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கூட கட்டாயமாக இந்தியைக் கற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். இது மீண்டுமொரு மக்கள் போராட்டத்தை உருவாக்கியது. குறிப்பாக தமிழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அப்போதிருந்த திமுக அரசாங்கம் மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையை அறிமுகம் செய்தது. மாநில அரசின் பொதுவிடங்கள், அரசாங்க நிருவாகம் நிலையங்கள், கல்வி நிலையங்கள் என எங்கும் தமிழ் மொழியிலேயே சேவைகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்களின் விளைவாக புதியதோர் இந்தி திணிப்பு எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தில் பணியாற்றுவோர் அனைவரும், அதாவது அமைச்சர்கள், அரசு திணைக்களங்கள், கூட்டுறவு நிலையங்கள், வங்கிகள் என அனைத்திடங்களில் பணியாற்றுவோரும் தமது சமூக ஊடகங்களை இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்துங்கள் என சுற்றறிக்கை அனுப்பியது அரசு. இதனால் இந்திய மொழி பேசாத மாநிலங்களில் பணியாற்றுவோர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தமிழகம் உட்பட பல மாநிலங்களிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியது.

சென்னை உட்பட இந்தி பேசாத மாநிலங்களில் குடியேறுவோர் அம் மாநில மொழிகளை கற்க மறுக்கின்றனர் எனவும், மாறாக உள்ளூர் மக்களை இந்தி மொழி கற்க கட்டாயப்படுத்துகின்ற மனோபாவம் வடநாட்டினர் மத்தியில் காணப்படுவதாக இந்தி மொழியைத் திணிக்காதீர்கள் என சென்னையை மையமிட்டு இயங்கி வரும் முகநூல் பக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

"இந்தி மொழி பேசுகின்றவர் அவரைச் சுற்றியுள்ளோர் இந்தி பேசவில்லை என்பதற்காக கொதிக்கின்றாரே, ஒருவேளை அவர் அமெரிக்காவிற்கு போனால் அங்கும் இந்தி பேசவில்லை என புலம்புவாரா? மாட்டார் தானே, அப்புறம் ஏன் இங்கு வந்த நம் மீது இந்தியைத் திணிக்கும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் நடந்து கொள்கின்றார்? ஏனெனில் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் முதல் தர மொழி என்பதாக மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார். மற்ற மொழி பேசுவோரை இரண்டாந்தர மக்களாகவே கருதுகின்றார்" என முகநூலில் கணேஷ் வேலுசாமி என்பவர் கூறுகின்றார். 

பெங்களூர் மாநகரத்தில் தூய்மையான இந்தியா வேண்டும் என்ற அறிவிப்பு பலகையை இந்தியில் வைத்திருப்பதைக் கண்டு பெங்களூரைச் சேர்ந்த சந்தீப் காம்பி கேள்வி எழுப்புகின்றார்? பெங்களூரில் வசிக்கும் பல கன்னடமல்லாதவர்கள் கன்னட மொழியை அறியாமலேயே வாழ்ந்துவிடலாம் என நினைக்கின்றனர் என ஸ்ரீராம் விட்டலாமூர்த்தி குற்றம்சாட்டுகின்றார். 

சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் ரயில்வே முன்பதிவில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே இருக்கின்றன? தமிழ் மொழிக்கு ஏன் இடமளிக்கப் படவில்லை என வசந்த் செட்டி கேள்வி எழுப்புகின்றார். 

"எனக்கு நினைவிருக்கின்றது ஒருமுறை திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தேன். அப்போது பாதுகாப்பு அறிவிப்புக்களையும், மற்ற முக்கிய அறிவிப்புக்களையும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தந்தனர். ஆனால், அந்த விமானத்தில் பயணித்த 90 % ஆன மக்கள் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளை மட்டுமே அறிந்தவர்கள். ஒரு பகுதியில் பேசப்படாத மொழியில் வெறும் சம்பிரதாயத்திற்காக பயன்படுத்துவது சரியா? ஆனால், நான் லண்டன் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வந்த சமயம், பிரிட்டீஸ் ஏர்வேசில் பணியாற்றும் பணிப் பெண்கள், " பிரிட்டீஸ் ஏர்வேஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது என தமிழில் அறிவித்துவிட்டுத் தான் ஆங்கிலத்தில் அறிவித்தனர்" என வலைப்பதிவர் விக்னேஷ் ராஜ் தமது கவலையை பதிவு செய்கின்றார்.

"இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற போலிக் கருத்தை தொடர்ந்து வெகுமக்கள் ஊடகங்களும், மாற்று ஊடகங்களும் பல காலமாக பரப்பி வருகின்றனர். இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல என சுட்டிக் காட்டினால், நம்மை தேசத் துரோகிகளாகவும், இந்து மத விரோதிகளைப் போலவும் சித்தரிக்கின்றனர் இந்துத்வா சார்புடையவர்கள்" என கருநாடாகத்தைச் சேர்ந்த ஐஷிக் சாகா என்ற மாணவி கோரா வலைதளத்தில் எழுதியிருக்கின்றார்.

பெங்களூர், சென்னை என்று மட்டுமில்லை இன்று இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்தி திணிப்பு அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினைப் அடுத்து நாட்டின் வடக்கிலிருந்து பலரும் தென்னிந்தியாவில் குடியேறி வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் குடியேறிய இவர்கள் அங்குள்ள மொழிகளை கற்க மறுக்கின்றார்கள், மாறாக உள்ளூர் மக்களை இந்தி கற்குமாறும் கட்டாயப்படுத்துகின்றனர். 

இன்று கருநாடகம், மராத்தியம், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் அதிகளவிலான இந்தி திணிப்புக்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு மட்டுமில்லை தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான அளவில் இந்தி மொழி திணிப்புக்கள் நிகழ்ந்து தான் வருகின்றன.

1976-ஆம் ஆண்டில் ஆட்சி மொழி தொடர்பிலான இந்திய சட்ட சாசன விதிகளில் எக் காரணம் கொண்டும் தமிழ் நாட்டில் இந்தி பயன்படுத்தப்படாது என உறுதி வழங்கப்பட்டுள்ள போதும், இன்று நடந்து கொண்டிருப்பதோ தலைக்கீழ் என்று தான் சொல்ல வேண்டும். அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வங்கிகள், ரயில்வே, அரசு அலுவலங்களில் கூட அனைத்து சேவைகளையும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக பல புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

"ஒன்றாம் வகுப்பு முதலே குழந்தைகளுக்கு இந்தியைக் கற்பிக்கின்றனர். இந்தியை கற்க வேண்டிய எந்தவொரு தேவையுமில்லாத போதும், எதற்காக கழுத்தைப் பிடித்து இந்தியை அரசாங்கம் திணித்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை" என கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரீத்தி ஸ்ரீதரா கூறுகின்றார்.

"எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது மொழி ஒன்று தேவை என்றால், நிச்சயம் அது ஆங்கிலம் மட்டுமே. இன்று எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிகின்றதல்லவா. ஆனால், எனது நண்பர்கள் பலர் மீதும் அவர்கள் பணியாற்றும் அலுவலக கூட்டங்களை இந்தியில் மட்டுமே நடத்துவதால் அவர்கள் மீது இந்தி வேண்டுமென்றே திணிக்கப்படுகின்றது." என்கிறார் மேலும் அவர்.

"நவீன் இந்தியா உருவானதிலிருந்தே இந்திய அரசாங்கத்தின் மொழி கொள்கைகள் முழுவதுமே குறைபாடுகள் நிறைந்த ஒன்று. மத்திய அரசாங்கம் தொடர்ந்து இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. அதன் எண்ணம் எங்கும் எதிலும் இந்தி இருந்தாக வேண்டும் என்பதாகவே இருக்கின்றது " என கருநாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வல்லீஷ் குமார் எழுதுகின்றார்.

கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் சுதர்சன நாச்சியப்பன் தமிழையும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். ஆனால் மத்திய மாநில அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சௌத்திரி இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 343-351 இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே எனக் கூறியிருப்பதாகக் தெரிவித்து அந்த தீர்மானத்தை முற்றாக நிராகரித்தத் தள்ளினார்.

இந்தியாவில் நிலைமை இப்படியிருக்க, இந்திய மொழியான தமிழிற்கு இலங்கை மற்றும் சிங்கப்பூரில் முழு ஆட்சி மொழிகளில் ஒன்று என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் முறையே வங்காளம் மற்றும் நேபாளி ஆகிய மொழிகள் ஆட்சி மொழியாக திகழ்ந்து வருகின்றன. ஆனால் அந்த மொழிகள் பேசுவோர் பெருமளவில் வாழ்கின்ற இந்தியாவிலோ அந்த மொழிகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதை சிலர் இந்தி வெறுப்பு என்ற கோணத்தில் குழப்புகின்றனர். இந்தி திணிப்பு தான் பிரச்சனையோ தவிர, இந்தி மொழியால் எவ்வித பிரச்சனையுமில்லை என்கிறார் ஹர்ஷா. அவருடைய கருத்தை ஆமோதிக்கும் மிதுன், " ஆம், நான் ஒரு தமிழன், இந்தி மொழியை நேசிக்கின்றேன். ஆனால் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கின்றேன். தமிழகத்தில் தமிழ் மொழி மட்டுமே போதும், இந்தி வேண்டியதில்லை" என்கிறார்.

"மத்திய அரசின் மிகத் தீவிரமான இந்தி மொழி பரப்புரைகளும், கூடவே பாலிவுட் திரைப்படங்களின் தாக்கத்தாலும், சில வடநாட்டு மக்களிடையே இந்தியே இந்தியாவின் சிறப்பான மொழி என்ற போலியான கருத்துருவாக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்கிறார் மராத்தியரான சுதீந்திரா சஞ்சீவ்.

"அனைத்து இந்தியர்களுக்கும், அவர்களுடைய மொழிகளுக்கும் சம உரிமை வழங்கினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை இந்தியர்கள் கொண்டாட முடியும். இல்லையென்றால், இந்தி மொழியல்லாதோர்கள் அனைவரும் இரண்டாந்தர குடுமக்களாக மட்டுமே இருக்க முடியும். நாங்கள் கோருவது எல்லாம் அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தான்" என கருநாடகத்தைச் சேர்ந்த மாணவரும், #StopHindiImpostion கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்குசெய்திருந்தவர்களில் ஒருவரான பிரசன்னா என்பவர்.

பொதுவாக இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்றாலே தமிழகத்தில் மட்டுந்தான் நிகழும் என பொது ஊடகங்கள் எப்போதும் சொல்லி வந்ததுண்டு. ஆனால், இந்த முறை மொழிப் போராட்டமானது கருநாடகம், மராத்தியம், மேற்கு வங்கம் என நாடளாவிய வகையில் விரிவடைந்திருக்கின்றது. மொழிச் சமத்துவம் வேண்டும் என ட்விட்டர் போராட்டத்தில் பங்கேற்ற பலரும் தமிழகத்திற்கு வெளியே இருந்து குரல் கொடுத்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

- விண்ணன்

Also published in English on Global Voices - No, India, Hindi Will Not Take Over Without a Fight.

வியாபம் இந்திய அரசியல் வரலாற்றிலேயே நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய முறைகேடு என்று சொல்லலாம். அல்லது வசமாக சிக்கிக் கொண்ட ஒரு களவுத் திட்டம் என்று கூட சொல்லலாம். இதில் சம்பந்தப்பட்டவர்களும் அவர்களை ஆட்டுவிப்பவர்களும் தினந்தோறும் புதுசு புதுசா பலரது கதைகளை தீர்த்துக் கட்டிக் கொண்டே வருகின்றனர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது. ஒருநாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர், மறுநாளோ கல்லூரியின் நிர்வாக முதல்வர் என 48 பேர் இதுவரை இறந்து போயுள்ளனர். அவர்களில் 23 பேரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்திருக்கின்றது. ஆனால் கூண்டிலிடப்பட்ட கூண்டுக்கிளியைப் போல சிபிஐ உச்சநீதிமன்றத்தின் ஆணையை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த வியாபம் முறைகேட்டினை எங்கோ ஒரு மூலையில் கிளறிக் கொண்டிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நேரடிப் பார்வையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி புரியும் ஒரு மாநிலத்தில் சிபிஐ-யால் எவ்வளவு ஆழத்திற்குத் தான் இந்த வழக்கைக் கிளற முடியும் என்பது தான் நமக்கு எழுகின்ற மிகப் பெரிய கேள்வியே.

இந்த முறைகேட்டிற்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குமான தொடர்பு 1990-களில் அந்த இயக்கத்தால் நடத்தப்பட்டும் வரும் சரஸ்வதி சிசு மந்திர் என்ற கல்வி நிறுவனத்தில் சுதிர் சர்மா தனது ஆசிரியப் பணியைத் தொடங்கியதில் இருந்து தொடங்குகின்றது. அவரது தந்தை பாபுலால் சர்மா, கூட்டுறவு பால் பண்ணையில் கணக்கராக இருந்தவர், அன்றாட பிழைப்புக்கு சாயந்தர வேளைகளில் பால் விற்று காலத்தை ஓட்டி வந்தார். ஆனால், இன்று சர்மாவின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா? 20, 000 கோடி ரூபாய்கள். அவரது சாம்ராஜ்யம் சுரங்கத் தொழில், கல்வித் தொழில், ஊடகத் தொழில் எனப் பரந்து விரிந்திருக்கின்றது. கடந்த 2003-ஆம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தனது வேலையைத் துறந்து விட்டு, அப்போதைய சுரங்கத்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சராக இருந்த லட்சுமிகாந்த் சர்மாவின் சிறப்பு கவனிப்பதிகாரியாக பணியாற்றத் தொடங்கியதிலிருந்து அவரது அசுர வளர்ச்சி தொடங்கியது.

சுதிர் சர்மா கைநிறைய காசு பார்க்கத் தொடங்கிய போது, மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்களை அவர் கவனிக்கத் தவறியதில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கின்றது. சொல்லப் போனால், ஒரு கட்டத்தில் இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் புழங்கும் பணத்தின் தொகைகள் பெருகியது, அதனால் உதவியாளர்களும் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்படுகின்றது, ஏன் கொடுக்கப்படுகின்றது என்பதற்கான தனிக் குறிப்புக்களை அவர்கள் வைத்திருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, பிரபாத் ஜா, பா.ஜ.க பாராளமன்ற உறுப்பினர் அனில் தேவ முதலியோரது பெயர்கள் அந்தக் குறிப்பிலிருந்தது தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லை சர்மாவின் ரயில், விமானச் செலவுகள் முதற்கொண்டு, தங்குமிடம் உட்பட அனைத்துச் இத்தியதி செலவுகளையும் சுதிர் சர்மா கவனித்து வந்திருக்கின்றார்.

சுதிர் சர்மாவிற்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார் முன்னாள் அமைச்சர் லட்சுமிகாந்த் மிஷ்ரா. மாண்புமிகு அமைச்சரே சோனிக்கும் ஆசானாக விளங்கியிருக்கின்றார். வியாபம் முறைக்கேட்டு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட இருவர் தந்த வாக்குமூலத்தில் சோனியின் பெயர் வெளிவந்திருக்கின்றது.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர், கே.எஸ். சுதர்சனிடமிருந்தும், சோனியிடமிருந்தும் பரிந்துரைக் கடிதங்களை மிகிர் குமார பெற்றதாகச் சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர் லட்சுமிகாந்த் மிஷ்ராவின் சிறப்பு அதிகாரி ஒ.பி.சுக்லா வாக்குமூலம் தந்திருக்கின்றார்.

"சுதர்சன்ஜி அவர்கள் (லட்சுமிகாந்த்) சர்மாவிற்குப் போன் பண்ணி, எல்லாம் நல்ல படியாக முடிந்துவிடும் எனச் சொன்னார். அப்புறம் சுதர்சன் என்னிடம் விடத்தாள்களை தந்து தெரிந்த விடைகளை எழுதச் சொன்னார், தெரியாதவற்றை வெற்றிடமாக விட்டுவிடுமாறும் என்னிடம் சொன்னார்." என மிகிர் குமார தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

வியாபம் முறைகேட்டில் அவர்களது பெயர்கள் அடிபடத் தொடங்கியதும், "இது வெறும் திட்டமிட்ட அரசியல் சதி" என நாக்பூரிலிருந்து அறிக்கை விட்டார் சோனி. சங்கதி கசிந்ததும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையோ, தகவல்களையோ குறிப்பிடாமல் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் வியாபம் ஊழலிற்கும் எவ்வித தொடர்புமில்லை என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல பத்திரிக்கையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.

ஆனால் முதல்வருக்கும், அவரது மனைவிக்கும் இம்முறைகேட்டில் உள்ள தொடர்புகளை திசைதிருப்பவே தமது இயக்கத்தின் பெயரை வேண்டும் என்று இழுத்துவிட்டிருக்கின்றார் என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஒரு பிரிவினர் குற்றம்சாட்டுகின்றனர். " முதல்வருடைய பெயரும், அவருடைய மனைவி சாதனா சுங்கின் பெயரும் திடிரென ஊடகங்களில் இருந்து மறைந்து போனது தற்செயலாக நடந்த ஒன்றில்லை " என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் ஒருவர் அடித்துக் கூறுகின்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்வரது மனைவிக்கு இம் முறைகேட்டில் தொடர்பிருப்பதாக முதல் குண்டை தூக்கிப் போட்டார் திக்விஜய் சிங். இதனைத் தொடர்ந்து சாதனா சுங்கின் தொலைப்பேசி அழைப்புக்களை விசாரிக்க வேண்டும் எனவும், அவர் பலமுறை வியாபம் நுழைவுத் தேர்வு அதிகாரிகளுக்குப் போன் போட்டுப் பேசியிருக்கின்றார் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் முதல்வரது மனைவியின் சொந்த ஊரான கோண்டியாவைச் சேர்ந்த 19 பேர் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தனர். வியாபம் முறைகேடு மூலமாகவே அவர்கள் நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து வியாபம் நுழைவுத் தேர்வத் துறை கட்டுப்பாட்டு அலுவலகராக இருந்த பங்கஜ திரிவேதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த இரு தலைவர்களுக்கு இம் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்டார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவருமான சத்தியதேவ் கட்டாரேயும் அதில் உண்மையிருக்கக் கூடும் என்ற தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். " இது அவர்களுடைய கனவுத் திட்டமாகத் தான் இருந்திருக்கின்றது. மத்திய பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்களை வளர்த்தெடுத்து பயிற்சிக் கொடுத்து எங்கும் ஊடுருவச் செய்வதே அவர்களின் முக்கிய குறிக்கோளாய் இருந்திருக்கின்றது " எனக் கட்டாரே மேலும் குற்றம்சாட்டுகின்றார்.

இது அத்தோடு நின்றதா, சிறப்பு விசாரணைக் குழுவினர் தம் பங்கிற்கு எண்ணற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஏறக்குறைய 1,900-க்கும் அதிகமான நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றது. இதில் நிறையப் பேர் மாணவர்களே. இவர்களில் பலர் மீது முறைப்படியாக எவ்வித குற்றப்பத்திரிக்கையும் கூடத் தாக்கல் செய்யப் படவுமில்லை, பலர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படவுமில்லை. சிறப்பு விசாரணைக் குழுவினரது பயங்கரவாத போக்கை கண்டு மக்கள் கடும் பீதிக்குள்ளாகியிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். கைதானவர்களைக் குற்றவாளிகளாக கருதாமல், எதிர்தரப்பு சாட்சியங்களாகக் கருதுவது தான் முறை என மாணவர்களுக்காக வாதாடி வரும் சட்ட வல்லுநர்கள் குழு தெரிவிக்கின்றது.

மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் அதிர்ச்சியடைந்து, பயந்தும் போயுள்ளனர். "இளைஞர்கள் பலரும் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர். பல மாணவர்கள் தம் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும் அஞ்சி முடங்கிக் கிடக்கின்றனர்" எனத் தெரிவிக்கின்றார் கட்டாரே. 48 நபர்கள் மர்மமான முறையில் இறந்து போயுள்ள செய்திகள் ஊடகங்களில் வந்தவண்ணமிருப்பதால் மக்கள் மத்தியில் பீதி குறையவில்லை.

11 மாதங்கள் சிறையிலிருந்து விட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால் பயத்துடனே வாழ்வதாகத் தெரிவித்திருக்கின்றார். " நான் வெளியே எங்கும் போறதில்ல, ஆபிசுக்கு கூட போறதில்ல. சிறையில், முன்பின் தெரியாத யார்யாரோ எல்லாம் வந்து நீதிமன்றத்திலோ, காவல்துறையிடமோ வாயைத் திறந்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என மிரட்டிவிட்டுப் போனார்கள் " என அவர் அவுட்லுக் இதழிற்குக் கூறியிருந்தார்.

இந்த வியாபம் முறைகேட்டின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவரும், வியாபம் நுழைவுத் தேர்வின் கணினி முறைமை பகுப்பாய்வாளருமான நிதின் மகேந்திராவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட தொடர் தொலைப்பேசி மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக இந்த முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத மற்றுமொரு நபர் தெரிவிக்கின்றார். "காவல்துறை அதிகாரிகளோ குற்றம்சாட்டப் பட்டவர்களிடமிருந்து பணம் கறப்பதற்காக அடித்தும், துன்புறுத்தியும், அவமானப்படுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். அவங்களுக்கு இப்போ பணம் கறப்பது தான் முக்கியமாக இருக்கின்றது" என அந்நபர் மேலும் தெரிவிக்கின்றார். "சிறைக்குள்ளும் சரி வெளியிலும் சரி எங்களுக்கு எங்கேயும் பாதுகாப்பே இல்லை" என்கிறார் அவர். 

***

சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறக்கும் சுதிர் சர்மா ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு அளித்த பண விவரங்கள், வருமான வரித்துறையால் சேகரிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.
இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து தப்ப வைக்கவும், சிறையிலிருந்து விடுவிக்கவும் சிறப்பு விசாரணைக் குழுவினர் பலரிடமும் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தகவல்களில் உண்மை இருக்கத் தான் செய்கின்றன என்பதை இதில் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் அறிய முடிகின்றது. விஜய திருப்பாதி என்பவர் வியாபம் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், இதற்காக அவர் ஆறு மாதங்கள் சிறையிலும் இருந்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் 14, 2015 அன்று நீதிமன்றத்திலிருந்து பிணையில் வெளியே வந்தார். ஆனால் வெளியே வந்து ஒரு சில நாட்களில், அதாவது ஏப்ரல் 25 அன்று சிறப்பு விசாரணைக் குழுவினரால் வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். வியாபம் அதிகாரிகள் பலரது கைதைத் தொடர்ந்து, மேலும் பல இடைத்தரகர்கள், ஆள்மாறாட்ட தேர்வர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள், மதிப்பெண் வழங்குநர்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், அவ்வளவு ஏன் பல மாணவர்களும் கைதாகியிருக்கின்றனர். மாணவர்கள் பலரும் தற்போது முன் பிணைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சிறையிலிருக்கும் பலருக்கும் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையுமின்றி, பிணையில் விடுவிக்கப்படாமலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவருக்கு அவருடைய மகனின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் தற்காலிக பிணை கேட்டும் கூட வழங்கப்படவில்லை. சிறப்பு விசாரணைக் குழுவினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களது பட்டியல் சம்பந்தமேயில்லாமல் நீண்டு கொண்டே போகின்றது. பல மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கூட சிறையிலிருக்கின்றனர். அவர்களைச் சிறையில் வைத்திருப்பதை விட விசாரணையின் தீர்ப்பு வரும் விசாரணைகளின் போது மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், மீறினால் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படலாம் என்ற நிபந்தனையோடு வரை கல்வியைத் தொடர அனுமதிக்கலாமே என வழக்கறிஞர்களும், காவல்துறை அதிகாரிகளும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

போபால் நகரை வலம் வந்து கொண்டிருக்கும் சில குறந்தகவல்கள் வியாபம் முறைகேட்டில் எந்தளவுக்குப் பணமும், பல நபர்களும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர் என்பதைத் தெளிவாக்குகின்றது. குறிப்பாக போபாலில் உள்ள சுதிர் சர்மாவின் வீட்டை வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் அவருடைய ஐபோன்4-யிலிருந்து பல எஸ்.எம்.எஸ்-கள் பெறப்பட்டுள்ளன.

"5 கிலோ சரக்கு உங்களுக்கு வந்திருச்சா?'

" ஆமா, இன்றைக்கு 17.5 கிலோ சரக்கு வந்திடுச்சு. நன்றிகள் பய்யா "

"லட்சுமிகாந்த்ஜிக்கு 5 கிலோவைக் கொடுத்துவிடுங்கள். நாளைக்கு நான் அனுப்புகிறேன் "

இந்த குறுந்தகவல்களில் பேசப்பட்டுள்ள "கிலோ" என்பது "பல லட்சம் ரூபாய்கள்" என வருமானவரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஜூலை 2014-லிருந்து சிறையிலிருக்கும் சுதிர் சர்மா மட்டுமல்ல, அவரது ஆசான் லட்சுமிகாந்தும் பெருமளவிலான துட்டுக்களை பெற்றிருக்கின்றார். சாகர கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன சஞ்சீவ் அகர்வால் என்ற கல்வித் தந்தையும் பெருமளவிலான தொகையை வழங்கி வந்திருக்கின்றார் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. திருபா கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்ற சுனில் தாதிர் என அறியப்பட்ட சுனில் தந்திரும் பெருமளவிலான தொகையை வழங்கி வந்திருக்கின்றார். இந்த கலக்சன் தொகையை எல்லாம் உடனடியாக லட்சுமிகாந்தின் தனிப்பட்ட உதவியாளரான மோகர் சிங் என்பவருக்குக் கைமாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10, 2012-யில் அகர்வால் 15 லட்சம் ரூபாய்களை சுதிருக்கு வழங்கியிருக்கின்றார், அந்தத் தொகையை அதே நாளில் சுதிர் மோகர் சுங்கிற்கு கொடுத்திருக்கின்றார். அதே போல, இரண்டு மாதங்கள் கழித்து மார்ச் 7 அன்று, அதே அளவிலான ஒரு தொகையை சுங்கிற்கு வழங்கியிருக்கின்றார்.


பெருங்கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நபர் ஏன் சுதிர் சர்மாவிற்கு பெருமளவிலான பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகின்றதல்லவா? இதனால் யார் உண்மையில் லாபமடைகின்றார்? இதைப் பற்றி வருமான வரித்துறையினர் வாயைத் திறக்கவேயில்லை என்பதும், கடந்த 2012-க்கு பின் இந்த வழக்கின் மீதான விசாரணை கொஞ்சம் கூட நகரவேயில்லை என்பது மட்டும் நிச்சயமாக புரிகின்றது..

ஆனால், சுதிர் சர்மாவால் "செலவிடப்பட்டுள்ள" 5.57 கோடி ரூபாய்களில் பெருமளவிலானவைகள், "சட்டவிரோதமான செயல்பாடுகளுக்காக செலுத்தப்பட்ட பணமாக" இருக்கும் என, வருமானவரித் துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

ஆனால் போபால், புது தில்லி போன்ற நகரங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் நம்ப தகுந்த ஆவணங்களின் பிரதிகளில் உமா பாரதியின் பெயர் தான் அடிபடுகின்றது. வியாபம் முறைகேட்டில் சிலருக்கு ரொக்கமெண்டேசன் கொடுத்தார் என அவருடைய பெயர் 17 இடங்களில் காணப்படுகின்றது. ஆனால், கல்விநிறுவனங்களில் இடம்பெறவா, வேலைவாய்ப்புகளில் நுழைவதற்கா எதற்காகப் பரிந்துரைகளை மேற்கொண்டார் என சரிவரத் தெரியவில்லை. ஆனால், அந்த ஆவணங்களில் உமா பாரதி யாரை எல்லாம் பரிந்துரைத்தாரோ அவர்களுடைய பெயர் விவரங்களும், வரிசை எண்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறப்பு விசாரணைக் குழுவினர் மனது வைத்தால் வெகு சுலபத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து உண்மையைக் கண்டறிய முடியும்.

வியாபம் தேர்வுகளின் கணினி முறைமை பகுப்பாளரான நிதின் மகேந்திராவின் வன்தட்டுகளைச் சிறப்பு விசாரணைக் குழுவினர் சோதனை செய்த போது, அதிலிருந்த பல முக்கியமான தகவல்கள் அழிக்கப்பட்டிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார். அதனை காந்திநகரில் அமைந்திருக்கும் அரசாங்க தடயவியல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பு பரிசோதனை செய்த போது, அழிக்கப்பட்ட தகவல்களில் உமா பாரதியின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவே சொல்லப்படுகின்றது. அவர் முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்திடமும், அவருடைய உதவியாளரான சுக்லாவிடும் பல தேர்வர்களின் பெயரைப் பரிந்துரை செய்திருக்கின்றார். தற்சமயம் லட்சுமிகாந்தும், சுக்லாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உமா பாரதியிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய போதும், எல்லாவற்றையும் ஒரே பத்தியில் மறுத்து பதில் அனுப்பினார் அவர். காவல்துறை தலைமை இணை இயக்குநர் நந்தன் தூபே விடாப்பிடியாக போபாலிலுள்ள அவரது வீடுவரை சென்று விசாரணைகளை மேற்கொண்ட போதும், பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்களில் தானோ ஓர் அப்பாவி என்றே கூறியிருக்கின்றார் உமா பாரதி.


வியாபம் முறைகேட்டின் கறைபடிந்த பக்கங்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து அரசிதழ் பதிப்பெறாத மாநில அரசுப் பணிகளுக்காக ஏறத்தாழ 81 நுழைவுத் தேர்வுகளை வியாபம் நடத்தியிருக்கின்றது. இத் தேர்வுகளின் மூலம் ஏறத்தாழ 1 கோடி விண்ணப்பத்தாரர்களிலிருந்து 4 லட்சம் பேரை தேர்வு செய்து பணிநியமனம் வழங்கியிருக்கின்றது மத்திய பிரதேச அரசாங்கம். தேர்வுகளை நடத்த வியாபம் நிறுவனம் வசூலித்த கட்டணங்கள் மூலமாகக் கடந்த ஆறு ஆண்டுகளில் 124 கோடி ரூபாய்களையும் வசூலித்திருக்கின்றது. கடந்த 2012-யில் நுழைவுக் கட்டணங்களை உயர்த்தியதால் கூடுதலாக 83 கோடி ரூபாயை அந் நிறுவனம் பெற்றது. ஆனால், அந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் முன்கூடியே நிர்ணயிக்கப்பட்டதோடு, கல்லூரிகளின் சீட்டுக்களும், பணி நியமனங்களும் லஞ்சம் கொடுத்தோருக்குத் தான் இறுதிப் போய்ச் சேர்ந்தன. இரண்டாம் தகுதி நிலை அரசுப் பணிகளுக்கு சுமார் 4 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்கள் வரை லஞ்சம் கோரப்பட்டிருக்கின்றது. மூன்றாம், நான்காம் தகுதி நிலை அரசுப் பணிகளுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்கள் முதல் 50 ஆயிரம் ரூபாய்கள் வரை முறையே லஞ்சம் வாங்கப்பட்டுள்ளன, எனக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். அதே போல, மருத்துவக் கல்லூரி சீட்டுக்கான விலை 10 முதல் 15 லட்சம் ரூபாய்களாகவும், கால்நடை மருத்துக் கல்விக்கான சீட்டுக்கள் 3 லட்சம் ரூபாய்களாகவும் இருந்திருக்கின்றது. மருத்துவ பட்டமேற்படிப்புக்கான சீட்டுக்கள் 75 லட்சம் ரூபாய்களுக்கு மேல் வாங்கப்பட்டுள்ளது.

முன்பு எல்லாம் அந்தந்த அரசுத் துறையே அரசுப் பணியிடங்களை நிரப்பி வந்தது. கான்ஸ்டபிள் நிலை காவலர்கள், காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான பணி நியமனங்களைக் காவல்துறை தலைமை ஆய்வாளர் அலுவலகமும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமுமே வழங்கி வந்தது. அரசுப் பள்ளிகளின் தற்காலிக ஆசிரியப் பணியிடங்களை ஊராட்சி மன்றங்கள் நியமித்து வந்தன. ஆனால், அண்மையக் காலங்களில் பெருகிவிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்சார் கல்லூரிகளின் வரவால் இப்போது அனைத்து இடங்களையும் ஒன்றாக வைத்து நிரப்பப் போகின்றோம் என கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட பணிநிரப்பு முறையும், மாணவர் சேர்க்கை முறையுமே இவ்வாறான முறைகேடுகளுக்கு பாதைப் போட்டுக் கொடுத்திருக்கின்றது.

இதில் கொடுமை என்னவென்றால், "நல்லாட்சி" தருகின்றோம் எனக் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தமது வசதிக்கேற்ப சட்ட திட்டங்களையும், அரசு விதிகளையும் வளைத்திருக்கின்றார்கள். முன்பு எல்லாம் எந்தவொரு வேலைக்கும் மத்திய பிரதேச வாழ்விடச் சான்றிதழ் தேவைப்படும், ஆனால் இப்போது அதை நீக்கிவிட்டனர். அதே போல சில பணிகளில் சேர சில தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன, அதாவது உயரம், எடை போன்ற உடல் தகுதிகளையும், ஓடுவது, வேகம் போன்ற ஆற்றல் தகுதிகளையும் இப்போது அவர்கள் நீக்கி விட்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் பணிகளுக்கு கோரப்பட்டு வந்த குறைந்தளவு உயரம் போன்றவையும் கைவிடப்பட்டுள்ளது.

கல்விச் சேர்க்கை, பணி நியமனங்களில் எவ்வித ஒழுங்கையும், விதிகளையும், கட்டுப்பாடுகளையும் வகுக்காமல் ஒன்றிணைக்கப்பட்ட விண்ணப்ப முறைக்கு மாறியதே பெருந் தவறு என்கிறார் ஓய்வுபெற்ற IAS அதிகாரி சத்திய பிரகாஷ் அவர்கள். இது ஒன்று சரியாக திட்டமிடப்டாமல் நிகழ்ந்ததாக இருக்க வேண்டும், இல்லையென்றால் வேண்டுமென்றே இவ்வாறு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விடயம், குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர் சத்திய பிரகாசையும் மிரட்டியிருக்கின்றார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைப் பற்றி எதாவது வெளியே வாயைத் திறந்தால் விளைவுகள் படு மோசமாக இருக்கும் எனவும், சம்பந்தமேயில்லாத 40 வழக்குகளை அவர் மீது போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

"பெரும்புள்ளி" ஒருவரையும், மாநிலத்தின் முதல் குடிமகனையும், அவரது மனைவியையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் காப்பாற்றும் நோக்கத்தோடு தான் இதுவரை விசாரணைகள் போய்க் கொண்டிருக்கின்றன என்றார். இல்லையென்றால் ஏன் சிறப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்த சில அதிகாரிகளே தமது உயிருக்கு ஆபத்து எனக் கூறி காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனுக் கொடுக்கணும் சொல்லுங்கள்? விசாரணைகள் அனைத்துமே ஏனோ தானோ என்று தான் நடைபெறுகின்றன. சிபிஐ விசாரணை வந்தால் கூட சம்பந்தப்பட்ட பெரிய கைகளை எல்லாம் தொடக் கூட முடியாது என தமது விபரங்களை வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் அவுட்லுக் இதழிற்கு தெரிவித்திருந்தார்.

வெளியாகிய ஆவணங்கள் எல்லாம் திரிக்கப்பட்டவை என பாஜக சாதிக்கின்றது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் திக்விஜய் சிங் வழங்கிய ஆவணங்கள் போலியாக இருந்தால் அவர் மீது சிறப்பு விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்திருக்குமே, அப்படி ஒன்றும் இதுவரை நடைபெறவில்லை. அது மட்டுமில்லை, மறு பக்கத்தில் வியாபம் அலுவலகங்களிலிருந்த கணினிகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சரிவரப் பாதுகாக்கப்படவில்லை என பிராசாந்த் பாண்டே கூறுகின்றார். மொத்தத்தில், சிபிஐ விசாரணை நடத்தினால் கூட ஏறக்குறையக் கலைக்கப்பட்டுவிட்ட சாட்சியங்களை வைத்துக் கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் கிடைக்கும் என்பதே பெரும் சந்தேகம் தான்.

Original Article: VYAPAM & Stew To Die For. The scam is no longer a state subject, it has become a Sangh family affair எழுதியது போபாலிலிருந்து கே.எஸ்.ஷைனி மற்றும் தில்லியிலிருந்து உத்தம் செங்குப்தா உடன் புது தில்லியிலிருந்து மீத்து ஜெயின், தமிழில் மொழியாக்கம் செய்தது விண்ணன்.
இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு (The Confederation of Indian Industry) என தங்களைத் தாங்களே ” நவீன இந்தியாவின் ஒப்பற்ற வணிகக் கழகம்” என பீற்றிக் கொள்கின்ற, இந்திய கார்பரேட் முதலாளிகளின் குழு ஒன்று கடந்த ஆகஸ்டு 7 அன்று ஒரு இணைய‌ மனுவை தொடங்கியது. அதில் அவர்கள் என்ன வேண்டுகோளை முன்வைக்கின்றார்கள் என்றால், அனைத்துக் கட்சிகளும், ” நாடாளுமன்றத்தில் கூட்டாக ஆலோசித்து செயல்படுவதன்” மூலம் எவ்வித தங்குதடையின்றி GST மசோதா மற்றும் நில அபகரிப்பு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமாம். தற்சமயம் அந்த இணைய‌ வேண்டுகோள் மனுவை ஆதரித்து 40, 000 கையெழுத்துக்களும் வந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், “ச‌னநாயகமே மிக உயர்ந்தது”, “நாடாளுமன்றத்திற்கு என ஒரு மாண்பு இருக்கின்றது” போன்ற சொற்களை இவர்கள் பயன்படுத்துகின்றார்கள். நாடாளுமன்றம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள், எதற்காக அவர்கள் சம்பளம் கொடுக்கப்படுகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது என அக்கறை கொள்கின்றார்கள். இதை எல்லாம் கூட விட்டுவிடுவோம்.

ஆனால் பாசக்கார இந்திய முதலாளி வர்க்கமே, நான் முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க‌ விரும்புகின்றேன். சொல்லப் போனால் கண்டிப்பாக இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும். இதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட வாயைத் திறப்பதே இல்லை. இதனால் நம் நாட்டின் மொத்த பொருளாதாரமே மூழ்கிப் போகின்ற பேரபாயம் இருக்கின்றது இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும்.. அது என்ன தெரியுமா? உங்களது மாபெரும் கடன் தொகை பாக்கிகளே.

கடந்த 2008-யின் பின்னரான பொருளாதார மந்தநிலை காணப்படும் இக் காலப் பகுதியில் வளரும் நாடுகளின் பொருளாதாரச் சந்தைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களின் திருப்பி செலுத்தப்படாத கடன் தொகைகள் மட்டும் 33 % அதிகரித்துள்ளது என ஜேபி மோர்கன் ஆய்வறிக்கை புள்ளிவிவரங்களை பைனான்சியல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் திருப்பி செலுத்தப்படாத பாக்கிக் கடன் தொகை ஏறத்தாழ 1 இலட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்கள், தற்போதைய இந்தியப் பணத்தின் மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 78 இலட்சம் கோடி ரூபாய்கள். இந்த மாதிரியான திருப்பி செலுத்தப்படாமல் இருக்கின்ற கடன் தொகையில் 20 வளரும் நாடுகளில் இந்தியா நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

வங்கிகளின் தகவல் படி பார்த்தால் மிக மோசமான வாரா கடன்களாக 14 இலட்சம் கோடி ரூபாய்கள் உள்ளன என என்.டி.டி.வி கூறுகின்றது.

கிரடிட் சுயிஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவர ஆய்வுத் தகவலின் படி பார்த்தால், இவ்வாறு கடன் தொகைகளை திருப்பிச் செலுத்தாமல் சாக்குப் போக்கு காட்டுகின்ற முக்கிய நிறுவனங்கள் சில இந்தியாவில் இருக்கின்றன. அவர்களில் அதானி குழுமம் (பாரத பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்) மட்டும் 81, 000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றது. எஸ்ஸார் குழுமம் 98, 000 கோடி ரூபாயையும், வேதாந்த குழுமம் 99, 000 கோடி ரூபாய்களையும், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் 1 இலட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்களையும், ஜே.பி குழுமம் 63, 000 கோடி ரூபாய்களையும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றனர். இந்த முக்கிய பத்து பெரும் கடனாளிகளின் தொகையைக் கூட்டினால் மலைக்கும் அளவிற்கு, அதாவது 6 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக வைத்திருக்கின்றனர்.

பிசினஸ் டுடே சொல்லுகின்ற கணக்கின் படி கடந்த 2009-10 ஆம் ஆண்டில் இருந்து 2013-14 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் தொழிற்சாலைக் குழுமத்தின் கடன் தொகை மட்டும் 64, 000 கோடியில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ஆக அதிகரித்துள்ளது. செசா ஸ்டர்லைட் நிறுவனத்தின் கடனோ 1, 961 கோடி ரூபாய்களில் இருந்து 80, 568 கோடி ரூபாய்களாக அதிகரித்திருக்கின்றது. அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுவது என்னவென்றால், ” 2009-10 ஆம் ஆண்டிலிருந்து 2013-14 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் இந்திய முதலாளி வர்க்கத்தின் கடன் தொகைகள் இரு மடங்காக, அதாவது 20 இலட்சம் கோடியில் இருந்து 41இ லட்சம் கோடியாக அதிகரித்திருக்கின்றது என்பது தான். அது கிடத்தட்ட 690 பில்லியன் டாலர்கள், அதாவது உலகின் முதல் 19 நாடுகளைத் தவிர மிச்சமுள்ள அனைத்து நாடுகளின் ஒட்டு மொத்த மொத்த செல்வத்திற்கு நிகரான அளவாகும்.” அந்த அறிக்கையை இங்கு விவரமாக வாசிக்கலாம்.

இந்த நிறுவனங்கள் வாங்குகின்ற கடன் தொகைகளை கூட்டிப் பார்த்தால், அது இந்திய அரசாங்கம் வாங்குகின்ற ஒட்டு மொத்த கடன் தொகையை விட அதிகம், இல்லை இல்லை மிக மிக அதிகம். இந்திய கார்பரேட்டுகள் பாக்கி வைத்திருக்கின்ற கடன் தொகை என்பது அனைத்து மாநில அரசாங்கங்கள் வைத்திருக்கின்ற கடன் தொகைகளை எல்லாம் விட மிக அதிகம் என பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் தெரிவிக்கின்றது.

இது மிகவும் மோசமானதொரு நிலைமையாகும். ” கார்பரேட் நிறுவனங்களின் கடன் தொகைகள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பல நேரங்களில் அவர்கள் சேர்த்திருக்கின்ற சொத்துக்களை விட கடன் மிக அதிகமாக இருக்கின்றது. அவர்களிடம் பெருங்கடனைத் தவிர எந்தவொரு சரக்கும் கிடையாது, எந்தவொரு மூலதனமும் கிடையாது, ” என எடல்வீஸ் சொத்து சீர்த்திருத்தக் குழுமத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சிபி ஆந்தணி பிசினஸ் டுடே இதழிற்கு தெரிவித்துள்ளார்.

வங்கிகள் எல்லாம் பெரும் பீதிக்குள்ளாகியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ரிசர்வ் ( இந்திய வைப்பு ) வங்கி கவலையடைந்திருக்கின்றது. அவ்வளவே ஏன் இந்திய கார்ப்பிரேட்டுக்களின் பெருங்கடன் நிலைமைகளைப் பற்றி பன்னாட்டு நாணய நிதியம் இந்தியா அரசிற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றது. இவ்வாறான நிலைமையால் நம் நாட்டின் வேலை வாய்ப்பு நிலைமைகள், ஏற்றுமதி தொழில்கள், சொல்லப் போனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நலனிற்கே பெரும் குந்தகம் ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்திவிட்டு, நம் கார்பரேட் அண்ணாத்தைகள் தார்மீக ஒழுங்கைப் பற்றியும், மக்களாட்சி மண்ணாங்கட்டி என வாய் ஜால சொற்களை வைத்துக் கொண்டும், நமது நாடாளுமன்றம் எப்படி இயங்க வேண்டும் என வியாக்கியானம் செய்கின்றார்கள். நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வரிப்பணத்தைக் கொண்டு இயங்கி வருகின்ற நாட்டுடமை வங்கிகளிடம் பெருந்தொகையான கடன்களை வாங்கி அமுக்கிக் கொண்ட இந்த பெரும் முதலாளி முதலைகளே! மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கத் தொடங்க முன்னர் முதலில் கொஞ்சம் இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொன்னால் நல்லா இருக்கும்.

விசை இதழிற்காக தமிழில்: விண்ணன் 

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவருமான‌  திரு அப்துல் கலாம் தனது 84-ம் வயதில் காலாமானார். மேகலயா மாநிலம் சில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விகழகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாணவர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கிவிழுந்து காலம் எய்திவிட்டார். அவருடைய இழப்பை அறிந்து நாடே அதிர்ந்து போனது. நவீன இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் தமது எளிமையான தோற்றத்தாலும், ஊக்கமளிக்கும் பேச்சாலும் கவர்ந்தவர் அவர்.

பள்ளியில் படிக்கின்ற சமயங்களில் அவர் மிகச் சாதாரண மாணவராகவே இருந்திருக்கின்றார். பின்னர் எப்படி அவர் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தார் என்பதை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இவ்வளவு சிறப்புக்களை அவர் அடைவதற்கு எது துணை புரிந்தது? அவரது தமிழ்வழிக் கல்வியால் கிடைத்த ஆழமான அறிவும், மாசற்ற ஒழுக்கமும் மட்டுமே. அவருடைய தாய்மொழிக் கல்வியானது அவர் விரும்பிய அறிவையும், நல்லொழுக்கத்தையும் அவருக்குப் புகட்டியது அது தான் அவருடைய முன்னேற்றத்திற்கு அச்சாரமாகவும் விளங்கியது.

தமிழ்க் கல்வி அவரது சிறுவயதிலேயே அவருக்குத் திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தது. அந்தத் திருக்குறளை கடைசிவரை வாழ்வியல் நெறியாக ஏற்று வாழ்ந்தவர் அவர். திருக்குறள் காட்டிய வழியில் புலால் உணவையும், மதுவையும் தவிர்த்தவர் ஆவார். அவர் தமது தன்னம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் திருக்குறளே காரணம் எனப் பலமுறை சொல்லியிருக்கின்றார். திருக்குறள் பற்றி அவர் பேசாத இடங்கள் கிடையாது. தமிழர்கள் அல்லாதோர் மத்தியில் பேசும் போது கூடத் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதே அவருடைய வழக்கம். அவர் பல மேடைகளில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி, இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான அனைத்தும் அந்த இலக்கியங்களில் இருக்கின்றன எனப் பேசியிருக்கின்றார். ஐரோப்பிய பாராளமன்றத்தில் பேசுகின்ற போதும் கூட, ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வரிகளைப் பேசி சகோதரத்துவத்தின் மாண்பை எடுத்துக் கூறினார்.

ஒருமுறை சீனக் கவிஞர் யூசி அவர்கள், திரு அப்துல் கலாமை சந்தித்த போது அவர் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கவிதையான திருக்குறளை வழங்கி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வழங்கி திருக்குறளை வாசித்துப் பார்க்குமாறும், பிடித்திருந்தால் சீன மொழியில் வெளியிடுங்கள் என வேண்டியிருக்கின்றார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் திருக்குறளை வாசித்த வந்த யூசி அதன் தத்துவ ஆழத்தையும், கருத்துக்களையும் கண்டு வியந்த அவர் 2011-யில் உலகக் கவிஞர்கள் மாநாட்டின் போது திரு அப்துல் கலாம் முன்னிலையில் திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார். இந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்தே திரு அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மீதும், திருக்குறள் மீதும் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதை உணர முடியும்.

ஆனால், அப்துல் கலாமுக்கு ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவு இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை. இந்த நாடு தன்னிறைவு அடையவும், பெருவளர்ச்சி காணவும், சீரும் செழிப்புமாக உயரவும் அவர் சொல்லிய ஒரு விடயம் பலராலும் பேசப்படாமலும் மாணவ சமுதாயத்திடம் கொண்டு செல்லப்படாமலும் இருக்கின்றது. சொல்லப் போனால் அப்துல் கலாமின் இந்தக் கனவுத் திட்டத்தை நம் நாட்டின் அரசுகளும், நமது பெருமுதலாளி வர்க்கமும் வேண்டும் என்றே மறைத்து வருகின்றது என்பேன்.

அந்த கனவு என்னவெனில் ஒவ்வொரு மாணவரும் தாய்மொழி வழியில் கல்வி கற்க வேண்டும் என அவர் விரும்பினார். அவரது முழுப் பள்ளிக் கல்வியும் தமிழ் பள்ளிக்கூடத்தில் தான் அமைந்திருந்தது. ஆனால் வாழ்வின் எந்தவொரு உயர்ந்த இடத்தை அடைந்தும் தமிழ் மொழியை அவர் விட்டுக் கொடுக்கவில்லை.

முக்கியமாக இன்றைய இளம் சமூகத்தவர் தமிழ் வழிக் கல்வியைப் பெற வேண்டும் என அவர் தீவிரமாக விரும்பினார். வெறும் இலக்கியத் தமிழ் மட்டுமின்றி, அறிவியல் தமிழை வளர்க்க வேண்டும் என்பதிலும் அவர் அதிக ஆர்வமுடையவராக இருந்திருக்கின்றார். தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் திடங்களுடன் “எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்” என்ற புத்தகத்தை எழுதிவந்தார். தமிழில் அவர் எழுதிவந்த இந்தப் புத்தகத்தின் 7 அத்தியாயங்கள் மட்டும் நிறைவடைந்திருப்பதாக அவரது ஆலோசகரான பொன்ராசா வெள்ளைச்சாமி தெரிவித்திருக்கின்றார். இந்தப் புத்தகத்தை நிறைவு செய்யாமலேயே அவர் காலமானது வருத்தம் தருகின்றது.

சென்ற ஆண்டுச் சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது தமிழ் மொழி வழியாகத் தமிழர்கள் எவ்வாறு செழிக்க வேண்டும் என்பதை விரிவாகக் கூறியிருந்தார்.

” தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே, தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தமிழைப் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றைக்குத்தான் தமிழ் வளரும்.

அதாவது, தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித் துறை செயல்பாடுகள், அரசியல், திரைப்படம், ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, தமிழ் மென்மேலும் செழித்து வளரும். தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் மொழி மீது ஆர்வம் உள்ளவர்கள், தமிழ்த் துறையின் தலைவர்கள், தமிழ் படிக்கும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆறு முக்கியச் செயல் திட்டங்களைச் செய்ய வேண்டும்.

அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர் கல்வி, ஆராய்ச்சித் துறைகளில் பயன்பாட்டு மொழியாகத் தமிழைக் கொண்டு வரத் தேவையான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் உள்ள பாடப் புத்தகங்களை, ஆங்கிலம், உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து, அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். அதைக் கல்வி பயில்வதற்கான நூலாக மாற்றம் செய்து, அதை அனைத்து உயர் கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும், தாய் மொழியான தமிழையும் அடிப்படையாக வைத்து நமது மொழியை வளர்க்க வேண்டும். முதலில் தமிழ் மொழியில் உயர் கல்வியைக் கற்பிக்கச் செய்து, அதன்பிறகு, ஆராய்ச்சியையும் நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து உலக அளவில் அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.அதை புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது அவசியம்.

தமிழ் மொழி வளர்வதற்கு உயர்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பங்கள், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிகளைச் செய்து தாய்மொழியிலேயே சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த வேண்டும்.

இதன் மூலம், நாம் உலகத் தரத்தோடு புதிய சாதனங்களை, இயந்திரங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளோடு போட்டி போட்டு வெற்றி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம், தொழில் மேம்பாடு அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும்.

ஆட்சி அதிகாரத்திலும், சட்டம், நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதேசமயம், தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு அதை, துணை ஆட்சி மொழியாகப் பயன்படுத்த வேண்டும். ” எனத் திரு அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிக் கூறுகின்றார்.

கலாம் தமிழில் பேசுவதைப் பெருமையாக நினைத்தார். நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசு தலைவரான பிறகும், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும் திருக்குறளை உதாரணம் காட்டாமல் இருந்ததில்லை. ஆனால் அவருடைய தமிழ் மொழிக் கனவானது செவிடன் காதில் ஊதிய சங்காகத் தமிழ் இளைஞர்களால் கண்டு கொள்ளபடாமலேயே போனது. இன்று அவருக்காகத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் கண்ணீர் அஞ்சலில் செலுத்துகின்ற இதே இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் குறைந்து வருவதை எண்ணி பல சமயம் அவர் வருத்தப்பட்டிருக்கின்றார். தமிழக இளைஞர்கள் அனைவரும், தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என அவர் விரும்பியதாக அவரது கல்லூரி தோழர் சம்பத்குமார் கூறினார். திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த கலாமின் நெருங்கிய தோழராக இருந்தவர் சம்பத் குமார்.

இன்று செவ்வாய் கோளிற்கு உலகிலேயே மிகக் குறைந்த செலவில் இந்தியா ராக்கேட் விட்டது எனப் பெருமையாக நாம் பேசிக் கொள்கின்றோம். அந்தச் செவ்வாய் கோளிற்குச் சென்ற விண்கலனை வடிவமைத்து ஏவ தலைமைத் தாங்கியவர்களும் தமிழர்களே. சுப்பையா அருணன், மயில்சாமி அண்ணாதுரை ஆகிய இருவரும் தமிழ்வழியில் கல்வி கற்று உருவாகிய விஞ்ஞானிகளே. தமிழ்வழிக் கல்வி தான் நம் தமிழ்நாட்டில் அப்துல் கலாம் போன்ற மாமேதைகளையும், எண்ணற்ற சாதனையாளர்களையும் உருவாக்கித் தந்துள்ளது. ஆனால் அத்தகைய தமிழ்வழிக் கல்வியை அழிக்கும் திட்டதோடு இன்று அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்படுகின்றது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது.

வெறும் பகட்டுக்காகவும் போலியாகவும் தற்காலிக சுகங்களுக்காகவும் தாய்மொழிக் கல்வியைத் தூர்த்துவிட்டு அதன் மீதேறி அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைப் பற்றி மேடைகளில் பேசுவதால் என்ன பயன். இன்று அவருடைய திருவுருவை வணங்கி கண்ணீர் மல்க மாலைகள் போடுவதோடு நமது கடமை முடிந்துவிட்டது என மாணவர்கள் எண்ணாமல், இந்த நாட்டை முன்னேற்ற‌ அவர் எடுத்துக் கூறிய தாய்மொழிக் கல்வியைத் தமிழ்மொழிக் கல்வியை நிஜமாக்க வேண்டும். திருக்குறள் எடுத்துக் காட்டும் வாழ்வியலோடு, தாய்மொழிக் கல்வியின் ஊடாக அறிவியலையும், ஆற்றலையும், கற்பனைத் திறனையும் வளர்த்துக் கொள்வதால் மட்டுமே அவருடைய கனவுகள் மெய்யாகவே சாத்தியப்படும். அதற்கு முதல் படியாகத் அப்துல் கலாம் விரும்பியது போலத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் அனைத்திலும் விரைவாகத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வர உறுதியேற்போமாக.

– விண்ணன்